பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய மாண்புமிகு நடுவர் ரசிகவ் ஞானியார்
அவர்களுக்கும்,
பேருரை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்க, ரத்தினச் சுருக்கமாக உரையாற்றி
இந்தப் பட்டிமன்றத்தைத் துவக்கிவைத்து ஊக்கமளிக்கும் ஜெயபாரதனுக்கும்,
இந்தப் பட்டிமன்றத்தை சாத்தியமாக்கிக் கொடுத்த புகாரிக்கும்,
காதல் குளத்தில் கல்லெறிவது வேறு யாருமல்ல, ஆண்களே என்று ஆணித்தரமாகச்
சொல்லவந்திருக்கும் என் இனிய நண்பர்களுக்கும்,
போலியாகவாவது சொல்லிக்கொள்வோம் - அது பெண்களே தான் என்று பேச்சுக்காய்ச்
சொல்லவந்திருக்கும் எதிரணியினருக்கும்,
வணக்கம்!
ஆண்டு விழாத் தலைவர் விக்கி சொன்னதிலிருந்தே துவங்குகிறேன்: "என்னது ஆண்களே
பட்டியல் இம்புட்டு நீளமா இருக்கு" என்றாரல்லவா? "உண்மையின் நீளம் அதிகம்" என்ற
பொன்மொழியைக் கேட்டிருக்கிறீர்களா அன்பர்களே? இதற்கு முன் கேட்டிருக்க
மாட்டீர்கள். ஏனென்றால் அதைச் சொன்னது நான் தான், அதுவும் இப்போது தான்!
அனைவரும் சொன்ன "முதல் கருத்தில்" என்னை மிகவும் கவர்ந்தது சிங்கை
அரங்கநாதனுடையது:
<<யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
முதலில் தலைவனே நோக்குகிறான். ஆனால் தலைவன் நோக்குவது தலைவிக்கு எப்படித்
தெரியும்? அவன் நோக்குவானா என்று கவனித்துக் கொண்டிருந்தாளா? எது எப்படியோ
தலைவி சிரிக்கிறாளோ ஜாடை காட்டுகிறாளோ. தைரியமாகத் தலைவியிடம் தலைவனே முதலில்
காதலைத் தெரிவிக்கிறான். இதுவே தமிழ்க் காதல். இலக்கியக் காதல். வாழ்வில்
நிகழும் உண்மையான காதல். எனவே ஆண்களே காதல் குளத்தில் முதலில்
கல்லெறிகிறார்கள். பெண்காதலை ஒளித்து வைக்கிறாள். ஆணே தைரியமாக அதனை
வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான்.>>
என்ன அழகாகச் சொல்லியிருக்கிறார்! சிரிப்பதோ ஜாடை காட்டுவதோவெல்லாம் காதல்
குளத்தில் கல்லெறிவதென்று பொய்யாகக் கற்பித்துகொள்கிறார்கள் இந்தக்
கலிகாலத்தில். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் காதல் உணர்வைத் தெரிவிப்பதும்,
ஆழ்கடலில் ஒளித்துவைக்கப்பட்ட உணர்வுகளைத் தூண்டிலிட்டு வெளியிழுத்து
வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதும் தானே வாழ்க்கையில் கள்ளூறச் செய்யும் கல்!
உலகம் தெரியாத பள்ளிக்கூடப் பருவமாகட்டும், பதின்வயதின் உச்சத்தில் வரும்
கல்லூரிப் பருவமாகட்டும், அனைத்திலும் தொடர்ந்து கல்லெறிவது ஆண்கள் தான்.
உதாரணத்துக்கு உங்கள் ஊர்ப் பேருந்து நிறுத்தத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.
தினம் தினம் நாம் காணும் சம்பவம் தான். காலை எட்டரை மணிக்குப் பள்ளிக்கூடம்
செல்லும் பருவப்பெண்களை விட்டுவைக்கிறார்களா, கல்லூரிப் பெண்களை
விட்டுவைக்கிறார்களா? வேலைக்குச் செல்லும் மகளிரை விட்டுவைக்கிறார்களா?
நான் பள்ளிக்கூடத்தில் படித்தபோது ஒரே வளாகத்தினுள் அமைந்த மூன்று மகளிர்
பள்ளிக்கூடங்களில் ஒன்றில் படித்தேன். அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு
ஆண்கள் பள்ளிக்கூடம். எதிர்புறம் சென்றால் ஐந்தாறு நிறுத்தங்கள் சென்று இன்னொரு
ஆண்கள் பள்ளிக்கூடம். இன்னும் கேட்கவும் வேண்டுமா? பெண்களின் கடைக்கண்
பார்வைக்கு ஏங்குவதைப் பற்றி மட்டும் நான் சொல்லவரவில்லை. அதற்கும் ஒரு படி
மேல், கடைக்கண் பார்வை கிட்டும் நேரம் ரூட் போட்டு ரூட் பஸ்ஸில் பயணிப்பதைச்
சொல்கிறேன். கோவையில் இதற்கெல்லாம் பெயர்போன பேருந்து வழி "7".
கோவைக்காரர்களைக் கேளுங்கள். ஏழைப் பற்றிப் பேசித்தீர்ப்பார்கள்.
பீளமேடு என்ற நகர்ப்புறத்தில் அவினாசி சாலை முழுக்க எங்கெங்கு காணினும்
எக்கச்-சக்கச்-சக்கமான பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளுமாக சாலையே
பூத்துக்குலுங்கும். நிற்க, அவை மட்டுமா பூத்துக்குலுங்கும்? நம் ரோமியோக்களும்
தான்! பெண்கள் பாட்டுக்கு அவர்கள் உண்டு அவர்கள் பேருந்து உண்டு என்று மகளிர்
பேருந்தில் பயணித்தாலும் அது நிறுத்தத்தில் நிற்கும்போது நிறுத்தத்திற்கு
வெளியே நடக்கும் பல்டிகளைப் பார்க்கவேண்டுமே!
அடுத்ததாக, வேலைக்குச் செல்லுமிடத்தில். பணியாற்றும் இடங்களில்
பரிமாறிக்கொள்ளப்படும் உள்ளங்கள் ஏராளம். அவற்றிலும் நம்மூர்ப் பெண்கள்
அடக்கியே வாசிப்பார்கள். நம் பாரம்பரியமும் வளர்ப்பும் அப்படி. ஆண்கள் தான்,
அரங்கநாதன் சொன்னதுபோல, அதை எப்பாடுபட்டாவது வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது.
(அன்புடனிலேயே அனுபவப்பட்டவர்கள் இருக்கிறார்கள் ;-) கேட்டுப்பாருங்கள்!)
தெரிந்தவர்களுக்குள், சொந்த பந்தத்துக்குள், அடுத்த வீடு எதிர்த்த
வீட்டுக்குள், நண்பர்களின் உடன்பிறப்புகளுக்குள் காதலா? அங்கேயும் காதலைச்
சொல்லி வெற்றிக்கொடி நாட்டுவது ஆண்களே! அத்தை பெண்ணும் மாமா பெண்ணும் பாவம்,
அப்பா அம்மாவுக்கும் தாத்தா பாட்டிக்கும் கட்டுப்பட்டு தேமே என்றிருப்பார்கள்.
நம் ஹீரோ இருக்கிறாரே.. விடுவாரா? விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு
வந்திருக்கும்போது விவரமாகத் திட்டமிட்டு விதைத்துவிடுவார் காதலை! எதிர்த்த
வீட்டுப் பெண்ணா? போகும்போதும் வரும்போதும் பைக்கை வைத்து வட்டம் போட்டே
வளைத்துப் பிடிப்பார் நம் நாயகன்! பண்டிகைக்குப் பலகாரம், இனிப்பு கொண்டு வரும்
பக்கத்து வீட்டுப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை!
சமீபத்தில் சிறிய அளவிலான ஒரு புறநகர் மிருகக்காட்சி சாலைக்குச்
சென்றிருந்தேன். மயிலொன்று தோகை விரித்தாடியது. பெண் மயில் கண்டுகொள்ளவேயில்லை.
அது பாட்டுக்கு நடந்து திரிந்துகொண்டிருந்தது. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆண்
மயிலுக்கோ வேறு எண்ணமே மண்டைக்குள் ஓடவில்லை. சுற்றிச் சுற்றி, பின்தொடர்ந்து
முன்தொடர்ந்து, பின்னால் போனால் முன்னால் வந்து, கண்டுகொள்ளாமல் போனால்
மீண்டும் வந்து... இப்படியாக அரும்பாடுபட்டுக்கொண்டிருந்தது. இதையே தான்
மனிதகுல ஆண்மக்களும் தொன்றுதொட்டு அன்று முதல் இன்று வரை
செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள்.
கடைக்கண் பார்வை என்பதைக் காதல் குளத்தில் கல்லெறிவதற்கு ஒப்பிடமுடியாது. ஒரு
பெண் கடைக்கண் பார்வை வீசினாலும் மனம் விரும்பினாலும் மௌனம் காப்பாள். காதலைச்
சொல்லாமல் தனக்குள் மருகிக்கொண்டிருந்தாலும் சரி, முதல் அடி
எடுத்துவைக்கமாட்டாள். அவனோ இதைக் கண்டுகொள்வான். அவள் பார்வையையும் பேச்சையும்
கவனித்துக்கொண்டேயிருந்துவிட்டு, அதுதான் அதுதான் அதுவேதான் என்று தனக்குள்
ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, சொல்லமாட்டாமல் உருகிக்கொண்டும் மருகிக்கொண்டும்
கிடந்த தேங்காயைத் திடீரென்று ஒரு நாள் டமாரென்று போட்டுச் சிதறுகாய்
உடைப்பான். இப்படியாக, பாதையோரக் கல்லோ பாராங்கல்லோ - கைக்குக் கிடைத்ததைக்
குளத்தில் வீசுவான். குளம் அதற்காகக் காத்திருந்ததா அல்லது குளத்துக்கே
அதிர்ச்சியான ஆச்சரியமாய் வந்ததா என்பதெல்லாம் இங்கே பேச்சில்லை! ஆனால் அவன்
எதிர்பார்த்ததுபோலவே அதன் தாக்கம் இதயத்தின் மத்தியில் துவங்கி அலையலையாய்
அடித்துக் கரை வரை பெருக்கெடுத்து ஆர்ப்பரிக்கும்.
அன்புடனின் இரண்டாவது பட்டிமன்றத்தில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் நன்றி கூறி, காலை வணக்கம், மதிய வணக்கம், மாலை வணக்கம், இரவு
வணக்கம் சொல்லி விடைபெறுகிறேன் (அவரவர் நேரத்திற்கேற்ப எடுத்துக்கொள்ளவும்!)
அன்புடன்
சேதுக்கரசி
--
*Gandhi..SSSanjaiGandhi*
--Break the Rule-
Its None of my Business What you Think of Me.
No comments:
Post a Comment